Monday, October 4, 2010

அனைத்துக் கட்சிகள் மனித சங்கிலி


தூத்துக்குடியில், சிவில் சப்ளை அதிகாரி முருகனின் படுகொலைக்கு சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

பழைய பேருந்து நிலையம் முன்பிருந்து துவக்கப்பட்ட இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு இந்திய கம்யூ. கட்சி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். பகுஜன் சமாஜ் கட்சி தேசிய செயலாளரும், உத்திரபிரதேச மாநில பாராளுமன்ற உறுப்பினருமான பிரமோத் குரில் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், மக்களுக்காக உணவு வழங்கும் துறையில் நடந்த ஊழலுக்காக நீதிகேட்ட நேர்மையான அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளார். இது திட்டமிட்ட படுகொலை. இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும், திமுக தலைமையிலான மாநில அரசும் ஊழல் நிறைந்தவைகளாக உள்ளன.

மத்திய மாநில அரசுகள் இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இல்லையெனில் இன்னும் 6மாத்தில் வர இருக்கின்ற தேர்தலில் மக்கள் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள். இந்த பிரச்சனையை சாதாரணமாக எண்ணிவிடக் கூடாது. முருகன் கொலை குறித்து பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

போராட்டத்தில், பாமக மாநில கொள்கை பரப்பு செயலாளர் வியனரசு, பகுஜன் சமாஜ் மாநில பொதுச் செயலாளர் ஜீவன்குமார், அதிமுக மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ அழகு முத்து பாண்டியன், மீனவர் மக்கள் கட்சி தலைவர் அலங்கார பரதர், பெரியார் திராவிட கழக மாநில செயற்குழு உறுப்பினர் பால் பிரபாகரன், நாம் தமிழர் இயக்க மாவட்டச் செயலாளர் வக்கீல் பிரபு, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட பொருளாளர் அரிபுத்திரன், மகளிர் அணி திலகா, பேராசிரியர் பாத்திமா பாபு, வியாபாரிகள் சங்கத் தலைவர் நடராஜன், மனித உரிமை பாதுகாப்பு இயக்கம் அதிசயகுமார் அதிசயகுமார், ராமச்சந்திரன் உள்பட அனைத்துக் கட்சியினர், பெண்கள் அமைப்புகள், மனித உரிமை ஜனநாயக அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment