தூத்துக்குடி சிவில் சப்ளை அதிகாரி முருகன் மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தூத்துக்குடியில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தூத்துக்குடி மண்டல உதவி தரக்கட்டுப்பாடு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் முருகன் மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்த மரணத்தின் பின்னால் ரேஷன் பொருட்களை கடத்தும் கும்பலின் சதி இருப்பதாகவும், அதற்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இது தொடர்பாக இன்று (அக்.4ம்தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.
இதனையடுத்து இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வலியுறுத்தி திருநெல்வேலி மாநகர், புறநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க., சார்பில் இன்று தூத்துக்குடி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் பி.எச்.பாண்டியன் தலைமை வகித்தார். சங்கரன் கோவில் எம்எல்ஏ கருப்பசாமி, நெல்லை மாவட்டச் செயலாளர் பாப்புலர் முத்தையா, நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் ராஜா செந்தூர் பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் சண்முக நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய பி.எச்.பாண்டியன், தூத்துக்குடியில் சிவில் சப்ளையில் பணியாற்றிய நேர்மையான அதிகாரி முருகன் தற்கொலை செய்யவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ரேசன் அரிசி கடத்தல் கடந்த பல ஆண்டுகளாக அரங்கேறி வருகிறது. இதற்கு முன் லாரி, ரயில் மூலம் கடத்தினர். தற்போது, தூத்துக்குடியிலிருந்து கப்பல் மூலம் கடத்தப்படுகிறது. இதற்கு இங்குள்ள ஷிப்பிங் கம்பெனி உடந்தையாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.
ஆர்ப்பாட்டத்தில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமுமுக ஐதர்அலி, மனித நேயம் மக்கள் கட்சி அப்துல் சமது, இந்திய குடியரசு கட்சி தமிழரசன், மதசார்பற்ற ஜனதாதளம் சொக்கலிங்கம், தூத்துக்குடி நகரச் செயலாளர் ஏசாதுரை, மாவட்ட பஞ். தலைவர் சின்னத்துரை, தொகுதி செயலாளர் விபிஆர.ரமேஷ் உட்பட அதிமுக கூட்டனி கட்சியை சேர்ந்தவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment