Friday, October 15, 2010

அதிகாரியின் உடல் மறு பிரேத பரிசோதனை


தூத்துக்குடியில் சிவில் சப்ளை அதிகாரியின் உடல் மதுரை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி தோண்டியெடுக்கப்பட்டு மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

தூத்துக்குடி சிவில் சப்ளை குடோனில் உதவி தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் முருகன்(42). இவர் செப்.7ம் தேதி விஷம் குடித்ததாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 11ம்தேதி இறந்தார். அவரது உடலில் காயங்கள் காணப்பட்டதால் வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டிருப்பதாக அவரது மனைவி செல்வி மற்றும் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கட்சிகள் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தின. தொடர்ந்து டிஎஸ்பி நாராயணன் விசாரித்து வந்த இவ்வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

அதே நேரத்தில் முருகனின் உடலை தூத்துக்குடி மையவாடி மயானத்தில் போலீசாரே புதைத்துவிட்டனர். இதையடுத்து தீர்த்தாம்பட்டியைச் சேர்ந்த ராமர், மதுரை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, தூத்துக்குடியில் புதைக்கப்பட்ட முருகனின் உடலை மீண்டும் தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை நடத்தி வரும் 18ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும் பரிசோதனை முழுவதையும் வீடியோவில் பதிவு செய்யவேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் தூத்துக்குடி தாசில்தார் முன்னிலையில் இன்று தூத்துக்குடி மயானத்தில் முருகனின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு மறு பரிசோதனை செய்யப்பட்டது. சுமார் 1மணி நேரத்திற்கும் மேலாக இந்த பரிசோதனை நடந்தது.

இதில் மதுரை மருத்துவக் கல்லூரி சட்ட மருத்துவத்துறை பேராசிரியர்கள் நடராஜன், ராஜவேலு, சிபிசிஐடி டிஸ்பி தயாளன் தமிழ்செல்வன், ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சப் இன்ஸ்பெக்டர் தங்கபாலா, தாசில்தார் கருப்பசாமி, விஏஓ ஜெயவேலு, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஸ்டாலின் பாக்கியநாதன், முருகேசன் உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த சமூக ஆர்வலர் ராமர், டாக்டர். சேவியர் செல்வ சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையை வரும் 18ம் தேதிக்குள் மதுரை உயர்நீதிமன்றத்தில் அதிகாரிகள் சமர்பிப்பார்கள்.

No comments:

Post a Comment