தூத்துக்குடி நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரி கொலையில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தரக்கட்டுப்பாட்டு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த முருகனின் மரணம், தற்கொலையால் நிகழ்ந்தது அல்ல; கொலை செய்யப்பட்டுத்தான் மடிந்தார் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
பிரேத பரிசோதனை அறிக்கை முருகன் கொலை செய்யப்பட்டார் என்பதற்கு முழு ஆதாரமாக இருக்கிறது. பிரேத பரிசோதனை இறுதி அறிக்கை தந்த மருத்துவர், முருகன் மாலத்தியான் விஷம் குடித்து இறந்திருக்கக் கூடும் என்று தெரிவித்து இருப்பது நிர்ப்பந்தத்தால் கொடுக்கப்பட்ட அறிக்கையாகத் தெரிகிறது. முருகனின் உடம்பில் இருக்கின்ற காயங்களை அந்த அறிக்கை மறைக்க முடியவில்லை.
முருகன் மனைவி செல்வி உண்ணாவிரதம் இருந்து போராடினார். நான் அந்த சகோதரியைச் சந்தித்தபோது, அழுதுகொண்டே அவர் என்னிடம் கூறியது: ``என் கணவரைக் கொலை செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. என் கணவருடைய உயிர் திரும்பி வரப்போவது இல்லை. ஆனால், அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று அரசாங்கத் தரப்பில் கூறுவது, அவர் மீது அபாண்டமாகப் பழி சுமத்துகின்ற கொடுமை ஆகும்.
அவர் தற்கொலை செய்யவில்லை என்ற உண்மை, ஊருக்கும், உலகத்துக்கும் தெரிய வேண்டும்'' என்று விம்மல்களுக்கு மத்தியில் கூறியபோது, தாங்க முடியாத வேதனை ஏற்பட்டது. காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் கொந்தளிப்பை உணர்ந்தபிறகு, பிரச்சினையை மூடி மறைக்க, குற்றப்பிரிவு புலனாய்வுப் போலீசார் விசாரிப்பார்கள் என்று அரசாங்கம் அறிவித்து உள்ளது. அவரது மனைவி செல்வி கொடுத்த புகார் மீது, உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறை அதிகாரிகளைப் பணி இடை நீக்கம் செய்ய வேண்டும்.
நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் முருகன் குற்றம் சாட்டி உள்ள நபர்களையும் உடனடியாகப் பணி இடை நீக்கம் செய்ய வேண்டும். முருகன் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். கொலை செய்யப்பட்டுத்தான் முருகன் இறந்தார் என்பதை மூடி மறைக்கத் தமிழ்நாடு அரசு முயலவில்லை என்று கூறுமானால் சி.பி.ஐ. விசாரணைக்கு, மாநில அரசே ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
No comments:
Post a Comment