தூத்துக்குடி சிவில் சப்ளை முருகன் கடந்த 7ம்தேதி பணியில் இருந்தபோது விஷம் குடித்ததாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 11ம் தேதி இறந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இதில் அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 5 பேருக்கு தொடர்பு உள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவரது மனைவி செல்வி மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றவும், முருகனின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கவும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். இதனையடுத்து, நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் பிரகாஷ், எஸ்பி கபில்குமார் சரத்கர் ஆகியோர் முருகன் மனைவி செல்வியிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கு அவர், ‘எனது கணவர் சாவுக்கு காரணமான 5 பேரை கைது செய்தால் தான் போராட்டத்தை கைவிடுவேன்’ என்றார்.
தனது கணவரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று சப் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
இந்நிலையில் தூத்துக்குடி சப் கலெக்டர் சஜ்ஜன்சிங் ஆர். சவான், முருகனின் உடலில் துர்நாற்றம் அதிகரித்துள்ளது. அதனால், அரசு மருத்துவமனையில் உள்ள மற்ற நோயாளிகளுக்கு தீங்கு ஏற்படுவதை தடுப்பதற்காக, இன்று மாலை 3 மணிக்குள் பிணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் இல்லையெனில் மாநகராட்சி சார்பில் பிணம் புதைக்கப்படும் என்று ஆனை பிறப்பித்தார்.
அந்த ஆனையின் நகல்கள் முருகனின் மனைவி செல்வியிடமும், உறவினர்களிடமும் வழங்கப்பட்டது. அவர்கள் ஆணையை வாங்க மறுத்ததால், ஆட்சியர் அலுவலவலக வளாகத்தில் உள்ள சுவற்றில் ஒட்டப்பட்டது. மதியம் 3மணியளவில் முருகனின் உறவினர்கள் முருகனின் பிணத்தை பெற்றுக் கொள்ள முன்வரவில்லை.
இதனையடுத்து, அவரது பிணம் 3.30மணியளவில் தூத்துக்குடி பாளை ரோட்டில் உள்ள பொதுமயானத்தில் புதைக்கப்பட்டது. தூத்துக்குடி சப் கலெக்டர் சஜ்ஜன்சிங் ஆர். சவான், ஏ.எஸ்.பி., சோனல் சந்திரா, மாநகராட்சி ஆணையர் குபேந்திரன், தாசில்தார் கருப்பசாமி மற்றும் போலீஸ் அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் முன்னிலை பிணம் புதைக்கப்பட்டது.
முருகன் பிணம் புதைக்கப்பட்டதன் எதிரொலியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலிருந்து பொது மயானம் வரை 5நபர்களுக்கு மேல் கூடாத வண்ணம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
பின்னர் உண்ணாவிரதம் இருந்த செல்வி மற்றும் உறவினர்கள் 25 நபர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவருக்கு ஆதரவாக இருந்த உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களை போலீசார் அடித்து விரட்டினர். அங்கிருந்த உண்ணாவிரத பந்தல், பேனர் போன்றவைகளை பிரித்து எறிந்தனர்.
இந்த சம்பவத்தில், மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் அரிராகவன், தங்கபாண்டியன், மள்ளர் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்த முத்துகுமார், சிபிஎம் (எல்) மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மற்றும் முருகனின் உறவினர்கள் உட்பட 25பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முருகனின் மனைவி செல்வி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து இந்திய கம்யூ. மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், மனித உரிமை பாதுகாப்பு மைய ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, தன் கணவரை கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 11 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த செல்வி மற்றும் அவரது உறவினர்களை போலீசார் கண்மூடித்தனமாக தாக்கி கைது செய்துள்ளனர்.
போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து வரும் திங்கள் (செப்.27) மதியம் 3மணியளவில் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம் என்று தெரிவித்தனர். இச்சம்பவத்தில் இரண்டு வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போரட்டத்தில் வழக்கறிஞர்கள் குதிக்கவுள்ளனர் என்றும் வழக்கறிஞர் ராமச்சந்திரன் கூறினார்.
No comments:
Post a Comment