Thursday, September 16, 2010
அதிகாரியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில்
தூத்துக்குடியில் சிவில் சப்ளை அதிகாரியின் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்ததவர் முருகன் (48). சிவில் சப்ளை குடோனில் உதவி தரக்கட்டுப்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 7ம்தேதி பணியில் இருந்தபோது விஷம் குடித்ததாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 11ம் தேதி இறந்தார்.
அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரது சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்துள்ளனர். இதனால் அவர் இறந்துள்ளார். அவரது மரணம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக முருகனின் மனைவி செல்வி மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவரது உடலில் பலவேறு இடங்களில் காயங்கள் இருப்பதாகவும், இதனால் அவர் கட்டாயப்படுத்தி விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் எனவும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி 11ம் தேதி முதல் போராடி வருகின்றனர். அவர்கள் கடந்த 13ம்தேதி முதல் தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே தங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 5 மணியளவில் முருகனின் மனைவி செல்வி திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால் மருத்துவமனைக்கு வர மறுத்து விட்டார். தொடர்ந்து நான்கு முறை மயக்கமடைந்தார்.
6 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முருகனின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அ.தி.மு.க., பா.ஜ., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட், சிபிஐ (எம்.எல்), புதிய தமிழகம், பகுஜன் சமாஜ், ஆதி தமிழர் பேரவை, நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், பெரியார் திராவிடர் கழகம், மள்ளர் இலக்கிய கழகம், புரட்சி பாரதம், தமிழக முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளும், மனித உரிமை பாதுகாப்பு மையம், அன்னை தெரசா நல அமைப்பு, மக்கள் உரிமை குழு, மக்கள் கண்காணிப்பகம், ஓசை, மக்கள் உரிமைக் குழு, வீராங்கனை, பெண்கள் இணைப்புக் குழு, நகர மத்திய வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும், தேவேந்திர குல வேளாளர் அமைப்புகளும், தலித் இயக்கங்களும் இன்று தூத்துக்குடியில் நடத்திய ஆலோசனை கூட்டத்தினை தொடர்ந்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கபில்குமார் சரத்காரை சந்தித்து பேசினார்கள். நாளை காலை ராஜாஜி பூங்கா முன்பிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலம் சென்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேசுவது என முடிவு செய்யப்பட்டது.
இதனால் இவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆனால் வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் அவ்வப்போது வந்து பேச்சுவார்த்தை நடத்துவதோடு சென்று விடுகின்றனர்.
கடந்த 11 ம்தேதி முதல் முருகனின் உடல் தூத்துக்குடி மருத்துவ கல்லூரியிலேயே வைக்கப்பட்டுள்ளது. இச்சமபவத்தில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள மணியாச்சி டி.எஸ்.பி. பா. நடராஜன் ஆறாவது நாளான இன்று காவல்துறை சார்பான விசாரணையினைத் துவக்கினார். முருகனின் மனைவி செல்வியிடம் வாக்குமூலம் பெற்றார்.
இதுகுறித்து செல்வி மற்றும் அவரது உறவினர்கள் கூறும்போது, ''பிரேத பரிசோதனை அறிக்கையில் முருகனின் உடலில் பத்துக்கும் மேற்பட்ட காயங்கள் உள்ளன என்றும், கழுத்து பகுதியில் காயம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அவரது மூளைப் பகுதியில் வீக்கம் இருப்பதாகவும், மார்பு எலும்பு உடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் போலீசாரும், அதிகாரிகளும் இதனை மறைக்கின்றனர். எனவே முறையாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை தொடர்வோம்'' என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment