Sunday, September 19, 2010
10வது நாளாக போராட்டம்: அனைத்து கட்சியினர் உண்ணாவிரதம்
தூத்துக்குடி குடிமைப் பொருள் வழங்கல் துறை தரக்கட்டுப்பாட்டு உதவி ஆய்வாளரின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் 10-ம் நாளாக திங்கள்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் காயங்கள் இருப்பது உறுதிப்படுத்தப் பட்ட நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டன அறிக்கை வெளியிடுள்ளனர். இந்த நிலையில் அனைத்துக் கட்சியினர் சார்பில் தூத்துக்குடியில் ஒருநாள் கண்டன உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி அண்ணாநகர் 10-வது தெருவைச் சேர்ந்த முத்தையா மகன் முருகன் (48). இவர், தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் துறை கிட்டங்கியில் தரக்கட்டுப்பாட்டு பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த 7-ம் தேதி காலை முருகன் வழக்கம்போல் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டுச் சென்றாராம். விஷம் குடித்துவிட்டதாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 11-ம் தேதி சனிக்கிழமை இறந்தார். இந்நிலையில் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி செல்வி அளித்த புகாரில் அலுவலகத்தில் நடைபெற்ற முறைகேடுகளை தனது கணவர் கண்டுபிடித்து போலீஸில் புகார் செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும், அதனால் அதிகாரிகள் அவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டனர் என்றும் தெரிவித்துள்ளார். தன் கணவரின் சாவுக்குக் காரணமானோரைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முருகனின் மனைவி செல்வி 10 நாள்களாக சாப்பிடாமல், காலவரம்பற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக அனைத்து கட்சிகள், மனித உரிமை அமைப்பினரும் இன்று காலை முதல் தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். பல்வேறு போராட்டம் நடத்தியும் மாவட்ட ஆட்சியரும் காவல்துறையினரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் சாதித்து வருகிறது. இவ்வழக்கில் முறையான சி.பி.ஐ. நீதி விசாரணை நடத்தப்பட்டு, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உண்ணாவிரத போராட்டத்தில், அதிமுக மாவட்ட செயலாளர் பள்ளத்தூர் முருகேசன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் மோகன், தூத்துக்குடி தொகுதிச் செயலாளர் விபிஆர் ரமேஷ், நகரச் செயலாளர் ஏசாதுரை, முன்னாள் எம்எல்ஏ ராஜம்மாள், வழக்கறிஞர் அணி யூ.எஸ்.சேகர், தியாகி இம்மானுவேல் பேரவை மாநில பொது செயலாளர் பூ.சந்திரபோஸ், இந்திய கம்யூ. மாவட்ட செயலாளர் வழக்கறிஞர். மோகன்ராஜ், புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர். கனகராஜ், மார்க்,கம்யூ. பொன்ராஜ், பாட்டாளி மக்கள் கட்சி மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் வியனரசு, பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொது செயலாளர் ஜீவன்குமார், மள்ளர் இலக்கிய கழகத்தின் முத்துக்குமார், தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை அமைப்பாளர் நயினார் குலசேகரன், தூத்துக்குடி நகர மத்திய வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் நடராஜன், பாமக ராஜலிங்கம், மனித உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர். ராமசந்திரன், வழக்கறிஞர்.அரிராகவன், மக்கள் உரிமைக் குழு அமைப்பாளர் வழக்கறிஞர்.அதிசயகுமார், ஆதிதமிழர் பேரவை மாவட்ட தலைவர் மனோகரன், வீராங்களை அமைப்பைச் சேர்ந்த பாத்திமா பாபு, ஓசை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் த.பழனி, மக்கள் உரிமை இயக்கம் தமிழ்ச்செல்வன், மக்கள் கண்காணிப்பகம் மண்டல ஒருங்கிணைப்பாளர் கணேசன், வான்முகில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன், மத்திய மாநில எஸ்.சி./எஸ்.டி. அரசு ஊழியர் சங்கத்தின் கோபாலன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில் மர்மமான முறையில் இறந்த முருகனின் உடல் 10வது நாளாக அரசு மருத்துவ கல்லூரியிலேயே வைக்கப்பட்டுள்ளது. முருகனின் மனைவி செல்வி 10 நாள்களாக சாப்பிடாமல், காலவரம்பற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment